News

எழுத்து படைப்புகள் மூலம் குடும்ப வன்முறையிலிருந்து மீட்சி பெற்றவர்களின் மேன்மை

Posted on 09 December 2017
 

 

எழுத்து படைப்புகள் மூலம் குடும்ப வன்முறையிலிருந்து மீட்சி பெற்றவர்களின் மேன்மை


குடும்ப வன்முறையிலிருந்து மீட்சி பெற்றவர்கள் தங்களின் பேனாக்களின் முனைகளில் தங்களின் வலிகளையும் வேதனைகளையும் கவிதை மற்றும் எழுத்து வடிவங்களாக உருமாற்றுகின்றனர். இதன் மூலம் புதிய நம்பிக்கை, ஆறுதல் மற்றும் தங்கள் குரல்களின் தேடல்களைக் காண்கின்றனர்.

ஆம், இதுவே Women’s Aid Organisation (WAO) என அழைக்கப்படும் பெண்கள் உதவி மையத்தால் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட தீனாவின் பயணம்: குடும்ப வன்முறையிலிருந்து மீண்டவர்களின் கவிதை மற்றும் எழுத்துக்களின் தொகுப்பு எனும் நூலின் முக்கிய நோக்கமாகும்.

எழுத்தாளர் பெர்னிஸ் சௌளி கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப வன்முறையிலிருந்து மீண்டவர்களுக்கு WAO-வின் புகலிடத்தில் அளித்து வந்த படைப்பு இலக்கிய பட்டறைகளின் பலனே தீனாவின் பயணம்.

“எழுதுவது என்பது மனதை ஆற்றுவதற்கான ஒரு கருவி. எங்களின் மன வேதனைகளுக்கு எழுத்தின் மூலம் குரல் கொடுக்கிறோம்; அதற்கு பெயர் இடுகிறோம். எழுதுவதால் அந்த வலிகளைக் கலையாக உருமாற்ற முடிகிறது,” என பெர்னிஸ் சௌளி விளக்கினார்.

“இந்தப் படைப்பு இலக்கிய பயிற்சி பட்டறைகள் நாங்கள் எங்களுக்குள்ளே நீண்ட காலமாக வைத்திருந்ததை வெளிப்படுத்தும் வலிமையைத் தந்தன. இதனால், எங்களுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ளவும் தீய சக்திகளை எதிர்க்கொள்ளவும் இந்தப் படைப்பு இலக்கிய பட்டறைகள் மிகவும் உறுதுணையாக இருந்தன,” என்று இந்தப் பட்டறையில் பங்கேற்பாளர்களில் ஒருவரான லின்டா ஸ்கண்டார் விவரித்தார்.

பெர்னிஸ் சௌளி மற்றும் WAOவின் சமூகவியல் அதிகாரியான கெல்வின் ஆங் தீனா எனப்படும் பாத்திரத்தை உருவாக்க மீண்டு வந்தவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தனர். பின்னர், ஓவியர் சான் வென் லி, தீனா என்ற பாத்திரத்திற்கு உயிர் அளித்தார்.

“தீனா எனும் பாத்திரத்தைக் குடும்ப வன்முறையிலிருந்து மீட்சி பெற்று மேன்மை கண்டு நம்பிக்கையின் வடிவமாக திகழும் பெண்ணாகவும், துன்பநிலையிலும் மிளிரும் நெகிழ்திறம் கொண்ட நாம் அன்றாடம் காணக்கூடிய ஒரு பெண்ணாகவும் கருத்தமைத்துள்ளோம்,” என்று வென் லி கூறினார்.

“தீனாவின் குரலானது மீண்டவர்களின் பன்முக கதைகளின் உருமாதிரியாகவும் ஆழ்மன எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும் நீதி அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என தீனாவிற்கு ஒரு சிறந்த குரலைத் தேடி நாங்கள் கடுமையாக உழைத்தோம்,”என்று மேலும் விவரித்தார் வென் லி.

“வன்முறையும் வசவும் கூடிய உறவுகளில் வாழும் போராட்டம் உள் உணர்வாகவும் காண முடியாத வேதனைகளாகவும் இருக்கும். ஆதலால், நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இதே போன்ற கதைகள் நம் சமுதாயம் மற்றும் நமக்கு தெரிந்தவர்களிடையே மீண்டும் நிகழுவதை அறிந்து கொள்ள முடிகிறது,” என்று கெல்வின் மேலும் வலியுறுத்தினார்.

தினாவின் பயணம், கடந்த 09/12/2017 இல் உலகளாவிய இன அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள்கள் பிரச்சாரத்தை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியீடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தீனாவின் பயணம் நூல் வெளியீட்டிற்குச் சிலாங்கூர் புரபட்டீஸ் பெர்ஹாட், நோத்திங்ஹாம் பல்கலைக்கழகம் (மலேசிய கிளை), கோலாலும்பூர் எழுத்தாளர் பட்டறை சங்கம் மற்றும் இன் டென் விரம்டெ (In de Vremde) ஆகியோர் ஆதரவு கரம் நீட்டினார்கள்.

உங்களுக்கு தீனாவின் பயணம் நூல் வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியது ரிம 30 அல்லது, அதற்கு மேலான நன்கொடையை Women’s Aid Organisation, 80-0238299-7, CIMB வங்கியில் “TNA” என்னும் குறிப்புடன் செலுத்தலாம். பிறகு, உங்களின் முகவரி மற்றும் நன்கொடை செய்ததற்கான ஆதார அட்டையை womensaidorg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

உங்களின் ஆதரவானது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து தகுந்த உதவிகளையும் மேம்புறுவதற்கான முயற்சிகளையும் WAO ஆவன செய்ய உதவும்.


 «  Back